இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

வெறுங்கையோடு கல்லறைக்கு....

Related image
அன்று பொன்னும் புகழும் சேர்க்க  நாடி மக்களைக் கொன்றோடுக்கி நாடுகளை வென்றெடுத்த மன்னாதி மன்னர்களின் இன்றைய நிலை பற்றி அறிவோம். இன்று 113 க்கு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சொத்துக்களை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்து கல்லறையை அடைந்துள்ள ஒரு ஆட்சியாளரின் நிலை பற்றியும் அறிவோம். இவர்களைப்போலவே பலர் இந்த பூமியிலிருந்தே வெளிப்பட்டு மீண்டும் பூமிக்கே திரும்பி அடங்கியிருப்பதை நாம் அறிவோம்.
 இவர்களில் ஒரு சாரார் தங்கள் உடலுக்குள் உயிர் என்ற ஒன்று இருந்தபோது தாங்கள் பெற்ற ஆதிக்கத்தால் மற்ற மக்களை தங்களுக்கு முன் மண்டியிட வைப்பதிலும் நாட்டுமக்களின் ஆர்ப்பரிப்பிலும் மகிழ்ச்சியுற்றார்கள். தங்கள் புகழ் மக்களுக்கு முன் பாடப்படுவதில் அகமகிழ்ந்தார்கள். தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்க அராஜகங்களையும் அக்கிரமங்களையும் தயக்கமின்றி கையாண்டார்கள். அனைத்தும் கைவந்தபோதும் செல்வத்தை சேர்க்கவேண்டும் என்ற போதை இவர்களை விட்டு அகலவில்லை.... எதுவரை? அந்த உயிரானது இவர்களின் கூடுவிட்டு பறந்து செல்லும்வரை!
-வெறுங்கையோடு வந்த நாம் வெறுங்கையோடுதான் திரும்பிச்செல்ல உள்ளோம் என்பதையும்
-மரணம் என்ற திடீரென குறுக்கிடும் ஒன்று தனக்காக காத்திருக்கிறது என்பதையும்
-தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் நிற்கவேண்டும் என்பதையும்
-தன் சம்பாத்தியத்தின் நியாய அநியாயங்களைப் பற்றியும் அவற்றை செலவு செய்தது பற்றியும் விசாரணை உள்ளது என்பதையும்
-தொடர்ந்து அதற்கேற்ப தண்டனை அல்லது பரிசு போன்றவை காத்திருக்கின்றன என்பதையும்
இவர்கள் உணராத நிலையிலேயே இவர்களை விட்டுவிட்டு அந்த உயிரானது அற்கான கெடு முடிந்துவிட்டதால் பறந்து சென்றது..
மன்னாதி மன்னர்கள் தொட்டு சாதாரண மனிதர்கள் வரையிலும் இந்நிலை வெவ்வேறு மட்டங்களில் தொடர்வதை அறிவோம்.
இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

102:1, 2  செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனின் நினைவை விட்டும்) பராக்காக்கி விட்டது-......நீங்கள் உங்கள் புதைகுழிகளைச் சந்திக்கும் வரை.
ஆம், செல்வத்தை சேர்க்கும் உங்கள் ஓட்டப்பந்தயத்தின் இடையே ஒருநாள் நீங்கள் இந்த சமாதிக்குள் வந்து விழத்தான் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன்.

102:3. அவ்வாறில்லைவிரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.  பின்னர் அவ்வாறல்லவிரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

 உண்மைகளை மறந்த உங்கள் பணவெறியின் பலனை நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள் என்பதை ஆணித்தரமாக மனிதனுக்கு உறைக்கும் வண்ணம் மேற்படி வசனங்களில் எடுத்துரைக்கிறான் இறைவன்.

102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
 மாறாக, சற்று நிதானித்து இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வோ குறுகியது, நீர்க்குமிழி போன்றது, நமது உண்மையான உலகம் இதுவல்ல, இறைவன் இதை ஒரு பரீட்சைக் கூடம் போல அமைத்துள்ளான், இந்த செல்வம் இறைவனுக்கு சொந்தமானது, இங்கு நான் பெற்ற செல்வமும் ஆதிக்கமும் என்னைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதுஎன்ற சிந்தனை உங்களை மேலிடுமானால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள்.

ஒருமுறை நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 'மனிதன் எனது செல்வம்; எனது செல்வம்'' என்று கூறுகின்றான். மனிதா! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?'' 
இச்செய்தியை  நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்  (முஸ்லிம் 5665 )
இங்கு சொல்லப்படுவது போல அவசரமாக தான் சேர்க்கும் பொருளில் தனது உண்மைப் பங்கு எவ்வளவு என்று சிந்தித்து அறிந்தால் மனிதன் நிதானத்தை அடைவான். மறுமையில் நிரந்தர உலகத்திற்கு எது தேவையோ அதற்காக தன் உழைப்பையும் செல்வத்தையும்  செலவிடுவான்.

பணவேட்டையின் சாதனைகள்
  இன்று நடக்கும் மூர்க்கத்தனமான பணவேட்டையின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்? அதுதான் கொழுந்துவிட்டு எரியும் நரகம் என்பது! தன்னை மறந்து, தனக்கு அனைத்தையும் தந்த இறைவனையும் மறந்து வெறும் பணம், சொத்து, புகழ் என்று வெறிகொண்டு அலையும் மனிதனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான்.:

102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

102:7. பின்னும்நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
  நிதானம் இழந்து வாழும் இந்த அறிவீனர்களுக்கு புதைகுழிக்கு அடுத்தபடியாகக் காத்திருப்பது நரகம் என்ற பாதாள எரிகிடங்குதான். அந்த நியாயத் தீர்ப்பு நாளில் எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாதவாறு உறுதியாக மனிதன் தன் கண்களால் அதைக் கண்டுகொள்வான்.  அந்த நரகம் எப்படிப்பட்டது? தொடர்ச்சியாக வேதனையை அனுபவிக்கும் இடம் அது. உதாரணமாக,
18:29  (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவே விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.

102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
  அந்நாளில் உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தென்படும். இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து அருட்கொடைகளும் பட்டியலிடப்பட்டு எடுத்துக்காட்டப்படும். அவன் மன்னாதி மன்னனாக இருந்தாலும் சரி, மந்திரிகள் பரிவாரங்கள் புடைசூழ மக்கள் ஆர்ப்பரிக்க வலம் வந்த நபர்களாயினும் சரி, அன்றைய நாள் அனைவரும் இவ்வுலக நாதனின் முன்னாள் மண்டியிட்டே ஆகவேண்டும்.
செல்வம் சேர்க்கும் போதையில் அவன் எதையெல்லாம் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தினானோ, சிறிதும் பெரிதுமான அனைத்து அருட்கொடைகளையும் இறைவன் அன்று நினைவுபடுத்துவான். எதையுமே அவனால் நிராகரிக்க முடியாது. அவனது கண்களும் காதுகளும் தோல்களுமே அவற்றுக்கு சாட்சி கூறுபவையாக இருக்கும்.. அவற்றிற்கு இவ்வுலகிலேயே நன்றி பாராட்டி அவற்றைத் தந்த இறைவனுக்கு அடிபணிந்தவனாக வாழ்ந்திருந்தால் அவன் அன்றைய நாளில் இறைவனின் தண்டனைகளில் இருந்து காப்பாற்றப்படுவான். மாறாக நன்றிகொன்று தன் மனோ இச்சைகளின் படி தான்தோன்றித்தனமாக வாழ்ந்திருந்தால் அவனுக்கு இறைவனின் தண்டனைகள் காத்திருக்கின்றன.
10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர்வழி காட்டுவான். இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

இவையெல்லாம் நாளை நடக்க இருக்கும் சம்பவங்கள். இவற்றை இன்றே நினைவுறுத்தி நிதானத்தோடு சிந்தித்து நம் வாழ்வின் போக்கை திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான் கருணையுள்ள இறைவன். திருமறையின் இந்த நினைவூட்டலை ஏற்று வாழ்வைத் திருத்திக் கொள்வோருக்கு நாளை மறுமையில் கவலைகள் இல்லை என்பது மட்டுமல்ல, இவ்வுலகிலும் அவர்கள் பலவிதமான மனஉளைச்சல்களில் இருந்தும் இழிவுகளில் இருந்தும் காப்பாற்றப்படுகிறார்கள். இன்று நம்மைச் சுற்றி நடப்பவைகளை சற்று நோட்டமிட்டாலே இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக