இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 நவம்பர், 2016

கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..!

ஓரிறையின் நற்பெயரால்...


அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.

இப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.

எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும். ஆம்! அறிவியல் இன்னும் தொடாத செயல்பாடுகள் ஏராளம் இவ்வுலகில் உண்டு.

 கடவுள் குறித்த அறிவியல் நிலைப்பாடும் இப்படி தான். விஞ்ஞான ரீதியில் கடவுளை ஏற்க ஒரு குறியீடும் இல்லையென்று சொல்வோர் அதற்கு எதிர்க்கேள்வியாக கடவுளை மறுக்கும் விஞ்ஞான குறியீடுகள் குறித்து கேட்டால், அறிவியலில் கண்டறியப்படாத எதுவும் ஏற்றுக்கொள்ள தகுதியானது அல்ல. ஆக கடவுளின் இருப்பு எங்கும் இருப்பதாக அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. ஆக கடவுள் இல்லை! - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்(?) தருகிறார்கள். இது எப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும்.?

எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இன்றும் நாம் புதிது புதிதாக செய்திகளை அறிந்துக்கொண்டே இருக்கிறோம். ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு!

சரி விசயத்திற்கு வருவோம். அப்படியானால் கடவுளின் இருப்பை நேரடியாக பிற்கால அறிவியலால் உண்மைப்படுத்த முடியுமா..? என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட! அறிவியல் என்பது நமது தேவைகளுக்காக பிறவற்றை ஆராய்வது, முடிந்தால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது. 

அப்படி ஆராயவும், ஆதிக்கம் செலுத்த முடியா நிலையிலும் கடவுள் இருப்பதால் அறிவியலால் கடவுளின் இருப்பை நேரடியாக உணர்த்த முடியாது. மாறாக இல்லையென்று அறிதிட்டு சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை. இப்படி சரி தவறு என தெளிவாய் கூறப்படாத ஒன்றின் உண்மை நிலையை தர்க்கரீதியாக ஆராயலாம்..

உதாரணமாக நான் அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன், காரணம் நான் அந்த நாட்டை பார்த்தில்லை, அது குறித்த செய்திகளை கேட்டதில்லையென்கிறேன். ஆகவே அமெரிக்க இல்லையென்பது என்பது என் வாதம் என வைத்துக்கொண்டால்.. இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மேற்கண்டவற்றிற்கு எதிராக எனக்கு ஆதார நிருபணம் தர வேண்டும்.

அதாவது, அமெரிக்கா என்ற நாடு இந்த  புவியில் வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வல்லரசு நாடாக இருக்கிறது,  வாஷிங்டன் டி.சி.இதன் தலை நகரம்.

இப்படி அமெரிக்கா குறித்து எனக்கு அதிகமாக தகவல்களை உங்களால் தரமுடியும். நேரடியாக போய் வந்தவர்களின் சாட்சியமும் இருந்தால் வேறு வழியில்லை நான் பார்க்கவில்லையென்றாலும் அமெரிக்க உண்டென்பதை ஒப்புக்கொண்டாகதான் வேண்டும். அது தான் உண்மையும் கூட..

அடுத்து லாம்கு ..?
லாம்கு என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன். மேற்கூறப்பட்ட அதே காரணங்கள் தான்.  அதை மறுப்பதாக இருந்தால் மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றி எனக்கு மறுப்பை தரவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி தேடியும்  அப்படி ஒரு நாடு குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே இல்லை .அதை உண்மைப்படுத்த உங்களிடம் எந்த ஆதார சான்றும் இல்லை என கொள்வோம். ஆக நீங்கள் வேறு வழியின்றி நான் சொல்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் லாம்கு என்ற ஒரு நாட்டை நீங்கள் இதுவரை கண்டறியவே இல்லை.

இங்கு தான் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் நான் இல்லையென்ற அமெரிக்காவை நீங்கள் உண்டென்பதற்கு ஆதாரங்கள் தந்தீர்கள். இரண்டாவதாக நான் மறுத்த லாம்குவிற்கு ஆதரவாக உங்களால் ஒரு சான்றை கூட தர முடியவில்லை. அதற்காக லாம்கு என்ற நாடு பறக்கும் தன்மையுடையது, ஒரு பச்சை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று மாற்று வரைவிலக்கணமும் தர முடியாது. ஏனெனில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை, மக்கட்தொகை, இனம், மொழி போன்றவையே ஒரு நாட்டிற்கான அடையாளம். 

ஒரு நாடென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணம் நமக்கு அறிவியலால் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முதல்  நாட்டிற்கு கூறியதால்  அதை நான் ஏற்றுக்கொண்டேன். லாம்குவை பொறுத்தவரை அப்படி ஒன்றை உங்களால் தரமுடியவில்லை ஆக மேற்கண்டவை இல்லாமல் வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தினால் அதுவும் தவறே! அப்படி அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு நாடு என்பதற்கான அடையாளத்தின் கீழ் அது வராது.

ஆக லாம்கு என்ற ஒன்று இல்லை. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி தான்  அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம் (யாரும் லாம்கு நாட்டை தேடி அலைய வேண்டாம். எனது பெயரை தான் (கு+லாம்) திருப்பி போட்டிருக்கிறேன்)



இதே உதாரணத்தை கடவுள் என்ற நிலையோடு பொருத்தினால் உண்டென்பதற்கும், மறுப்பதற்கும் சான்று தரவேண்டும். கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள்.

இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும் மாறாக கடவுள் நேரடியாக தெரிவதில்லை. அறிவியலிலும் உட்படவில்லை என்றால் அது மேற்கண்ட நிலைக்கு எதிர் நிலை தான் தவிர மறுப்பாகாது.

கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது கடவுளை மறுப்பதாக இருந்தால் அந்த கூற்றுக்கு உடன்பட்டே மறுப்பை கூற வேண்டும். அதாவது நேரடியாகவும் இல்லாமல், அறிவியல் சாதனங்களில் நிறுத்தாமல் கடவுளின் இருப்பை எப்படி காட்டுவது..? என்பதை கடவுள் மறுப்பாளர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்..

அஃதில்லாமல் மீண்டும் மீண்டும் கடவுளை மறுக்க அறிவியலை அழைத்தால் அது அறியாமை வாதமே.. ஏனையவைகளை கண்டறிந்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுப்போல கடவுள் குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வரைவிலக்கணம் அறிவியல் ஏற்படுத்தி தரவில்லை.  கடவுளை குறித்து அறிய கடவுள் ஏற்பாளர்கள் / மறுப்பாளர்கள் கூறும் வாதங்களை அடிப்படையாக வைத்தே அறிவியலோடு பொருத்த வேண்டும். ஆனால் இங்கே கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் மறுப்புக்கு அறிவியலையே பதிலாக்க பார்க்கிறார்கள்.

ஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும்?  கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக  காத்திருக்கிறது.

  •  உலக உருவாக்கத்திற்கு பிக்பாங் தியரி வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்திய நிலை குறித்து விளக்க முற்படுவதில்லை. அதாவது பிக்பாங் ஏற்பட்ட விதத்தை மட்டுமே பேசுகிறது. -பிக்பாங் எனும் பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டும்?  
  • ஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே . எது அப்படி சாத்தியமாக்கியது?  
  • மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்?
  •  இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..?
  • மருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.?  அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்?
இப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய முரண்பாடான சிந்தனை...!

மேற்கண்ட வினாவிற்கு அறிவியல் விடை அளித்தால் கடவுள் இருப்பதென்பது அவசியமே இல்லாத ஒன்று தான். அதுவரை கடவுளின் இருப்பை அறிவியல் மெய்ப்படுத்திக்கொண்டே தான் இருக்க வேண்டும்...

அறிவியலை கடவுளுக்கு எதிராக முடிச்சிட பார்க்காதீர்கள். ஏனெனில் அறிவியல் கடவுளின் எதிரியல்ல. மனித பயன்பாட்டிற்கு கடவுள் கொடுத்திருக்கும் ஓர் கருவி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக