இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 மே, 2016

உண்மை இறைவன்பால் திரும்புவோம்


உண்மை இறைவன்பால் திரும்புவோம்

= உங்கள் இறைவன் கூறுகிறான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.(திருக்குர்ஆன் 40:60)
சர்வவல்லமையும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவன் மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதில்கூறும் ஆற்றல் கொண்டவன். அவன் அல்லாதவற்றுக்கு பிரார்த்தனையை செவிமடுக்கவும் பதிலளிக்கவும் இயலாது. இறைவனுக்குச் சொந்தமான பூமியில் அவனது அருட்கொடைகளை அயராது அனுபவித்துவிட்டு அவனை வணங்காமல் அவன் அல்லாதவற்றை வணங்குவது இறைவனுக்கு செய்யும் நன்றிகேடாகும். இவ்வாறு அகங்காரத்தோடு நடப்பவர்களுக்கு மறுமை வாழ்வில் வாய்க்க இருக்கின்ற தண்டனையை மேற்படி வசனத்தின் மூலம் எச்சரிக்கிறான்.

பலதெய்வ வழிபாட்டின் தீய விளைவுகள்
படைத்த இறைவனை நேரடியாக வணங்குவது என்பது எளிதானது, பொருட்செலவில்லாதது. ஆனால் அவன் அல்லாதவற்றை கடவுளாக பாவித்து வணங்கும்போது மனிதகுலம் பல குழப்பங்களுக்கும் மோசடிக்கும் ஆளாகிறது. படைப்பினங்களையும் உயிரும் உணர்வும் அற்ற பொருட்களை கடவுளாக பாவிக்கும்போது இறைவனைப்பற்றிய மதிப்பு அல்லது மரியாதை மரியாதை உணர்வு (seriousness) அகன்று போவதால் இறையச்சம் என்பது மக்களிடையே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் சமூகத்தில் பாவங்கள் மலிகின்றன. இடைத்தரகர்கள் பலர் கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கும் அவர்களிடையே மூட நம்பிக்கைகள் பரவுவதற்கும் வழிகோலுகிறது. கடவுளை பலரும் பல்வேறுவிதமாக சித்தரிக்கும்போது அதன் அடிப்படையில் ஒரே மனிதகுலம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அவர்களிடையே கலகங்கள் உருவாகக் காரணமாகிறது. 
இவ்வுலகின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்ற இறைவனின் தூதர்கள் அனைவரும் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் படைப்பினங்களை எக்காரணத்தைக் கொண்டும் வணங்கக் கூடாது என்பதை மிக்க கண்டிப்போடு மக்களுக்கு போதனை செய்தார்கள். இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக அருளப்பட்ட திருக்குர்ஆனும் அதையே பறைசாற்றி நிற்பதை நாம் காணலாம்:

நன்றிகேடு
அவ்வாறு போலியான தெய்வங்களை வணங்குவோர் இறைவன் வழங்கியுள்ள அருட்கொடைகளைப் பற்றி சற்று சிந்தித்தாலே அவர்களுக்கு உண்மை விளங்கிவிடும். இவர்களின் படைப்பிலும் இவர்களைச் சூழவுள்ள படைப்பினங்களின் படைப்பிலும் பரிபாலனத்திலும் இவர்கள் அன்றாடம் அனுபவித்து வரும் அருகொடைகள் எதிலும் இவர்கள் எடுத்துக் கொண்டுள்ள போலி தெய்வங்களின் பங்களிப்பு சிறிதும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டாமா?

40:61நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)

40:62- 63 அவன்தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்? அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திசை திருப்பப்பட்டனர்.
பூமியெங்கும் பரவிக்கிடக்கும் இறைவனின் படைப்பினங்கள் அனைத்தும் அவனது உள்ளமையையும் அவன் மனிதர்கள் மீது கொண்ட கருணையையும் பறை சாற்றி நிற்பதை நாம் காணமுடியும். மனிதன் என்ற ஒரு ஜீவி இந்த பூமியில் வாழ்கின்றான் என்பதற்காகவே இவை அனைத்தும் படைக்கப்பட்டு அவனது வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கும் வகையிலும் அவனுக்கு இடையூறு நேராத வகையிலும்  இயக்கப்பட்டு வருவதை சற்று சிந்தித்தாலே உணரலாம்.

40:64அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன்தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
அப்படிப்பட்ட உண்மை இறைவன்பால் அவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றியறிதலோடு அவனுக்கு அடிபணிந்தவர்களாக தூய உள்ளத்தோடு அவன்பால் திரும்புவதே அறிவுடைமை! அந்தக் கருணை மிக்க நம் இரட்சகனே நமது பிரார்த்த்னைகளுக்கு பதிலளிக்கக் கூடியவனும் ஆவான்.

40:65அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக