இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 ஜூன், 2015

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.
இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பது எளிதாகப் புரிந்துவிடும். இன்று தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதால் நாட்டில் தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகுவதையும் அதனால் பெரும்பாலான மக்கள் விரக்தியின் விளிம்புக்கே சென்றிருப்பதையும் நாம் அறிவோம். இன்று நாம் அனைவரும் விடைதேடிக் கொண்டிருக்கும் கேள்வி இதுவே:
மனித வாழ்வில் அந்த ஒழுக்கத்தை எவ்வாறு உண்டாக்குவது?
மனிதனை நல்லொழுக்கம் உள்ளவனாக ஆக்கவேண்டுமானால் முதலில் அவன் தன் மனோஇச்சைகளைக்  கட்டுப்படுத்திக் கொண்டு வாழ முன்வர வேண்டும். அதற்கான உந்துதல் அவனுள் எழவேண்டும். அடுத்ததாக அவன் இவ்வுலகின் சொத்தக்காரனான இறைவன் எதை எவுகிறானோ அதை அவன் செய்ய வேண்டும். அதுவே புண்ணியம் என்பது. அவன் எதை விட்டும் தடுக்கிறானோ அவற்றில் இருந்து விலகி வாழ வேண்டும். அதுவே பாவம் என்பது.. தொடர்ந்து இந்த செயல்பாட்டில் நிலைத்திருக்க வேண்டும். இதற்கு துணைபோகும் வண்ணம் ஒரு வாழ்க்கைத் திட்டம் தேவை.
ஆம், இதைத்தான் வழங்குகிறது இஸ்லாம்!
இஸ்லாம் என்றால் என்ன?
. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்
  அதாவது இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடுகளை(discipline)ப் பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்! இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்குப் இறைவன் புறத்திலிருந்து மறுமையில் வழங்கப்படும் பரிசே நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம்!
இஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்து கட்டுப்பாடு மிக்கவனாக ஆக்குகிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுகிறது.
  1. ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
2.. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது. சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன. பல குழப்பங்களுக்கும் தீமைகளுக்கும் காரணமாகும் இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.
3.  இறைவனின் நீதிவிசாரணையும் மறுமை வாழ்வும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.
 ஆக இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப்பட்டுள்ளது என்பதே இஸ்லாம் நினைவூட்டும் உண்மையாகும். இதை மறந்து வாழ்வதே மனித குலத்தின் அமைதியின்மைக்குக் காரணமாகும்.
நடைமுறை வழிகாட்டுதல்
மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்கியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.
இறைவன் கூறும் இந்த வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று வாழ்பவர்களுக்கே அரபு மொழியில் முஸ்லிம்கள் (பொருள்: கீழ்படிபவர்கள்) என்று வழங்கப்படுகிறது. அவ்வாறு வாழ முற்படுபவர்களுக்கு ஐவேளைத் தொழுகை, ஜகாத் எனும் கட்டாய தானம், நோன்பு, ஹஜ்ஜ் போன்றவைக் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் சமூக நல்லொழுக்கத்தை வலுப்படுத்துவதை நீங்கள் காணலாம்.
ஒருவர் இஸ்லாத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும். அதற்கு சதா இறைவனின் தொடர்பும் நினைவும் வேண்டும். உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் இறை நினைவும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது.  இதைப் பள்ளிவாசல்களில் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து நிறைவேற்றும்போது சகோதரத்துவமும் சமத்துவமும் இயற்கையாகவே பேணும் பண்பு வந்துவிடுகிறது. மக்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அங்கு ஏற்படுவதால் சமூக உறவு வலுப்படுவதோடு சமூகத்தின் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகள் உருவாகின்றன. நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ்ஜ் என்ற கடமை!

இவ்வாறு இஸ்லாம் கூறும் நம்பிக்கைகளோடு இணைந்த நடைமுறைக்கு  மக்களை – குறிப்பாக குழந்தைகளைப் - பழக்கப் படுத்தினால் அவர்கள் பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள். யாரும் காணாதபோதும் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவர்களை பாவச் செயல்களில் இருந்து தடுக்கும். உதாரணமாக அவர்கள் இணையம் செல்பேசிகள் தொலைக்காட்சிகள் இவற்றை தகுந்த முன்னெச்சரிக்கையோடு கையாள்வார்கள். இறை பொருத்தத்திற்க்காகவும் மறுமையில் வாய்க்க இருக்கும் இன்பங்களுக்காகவும் வாழ்வில் தானதர்மங்கள், தியாகங்கள், எளியோருக்கும் நலிந்தோருக்கும் உதவுதல், தீமைகளுக்கு எதிராகப் போராடுதல் என்பனவற்றை சுயமாக முன்வந்து செய்வார்கள். நல்லொழுக்கம் வாய்ந்த சமூகத்தை உலகெங்கும் கட்டியெழுப்புவார்கள்.

3 கருத்துகள்: