இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 மார்ச், 2015

எதிர்த்தோரின் குழந்தைகளின் நலன் நாடிய உத்தமர்

மனிதன் சக மனிதனுக்கு எதிரியல்ல, மாறாக ஷைத்தான் என்ற மனிதகுல விரோதியே மனிதர்களை மற்ற மனிதர்களுக்கு எதிரியாக முன்வைக்கிறான், பகைமையை மூட்டுகிறான் என்பது இஸ்லாம் போதிக்கும் அடிப்படை கல்வியாகும்.
நபி(ஸல்) அவர்கள் தம்மைக் கொடூரமாக எதிர்த்தவர்களின் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காகக் கூடப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.  அனைத்து மனித குலத்தின் எதிர்கால சந்ததிகளின் சீர்திருத்தத்திற்கும் அவர்கள் வழங்கிய முக்கியத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக  இது அமைந்துள்ளது.
நபி(ஸல்) அவர்கள் தாயிஃப் நகருக்கு சத்தியப் பிரச்சாரத்திற்காகச் சென்றார்கள். அங்கு மக்களிடம் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு படைத்த இறைவனை நேரடியாக வணங்கி வாழ அழைத்தார்கள். இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப்பிழைத்து வந்த இடைத்தரகர்களும் ஆதிக்க வர்க்கமும் மக்களை நபிகளாருக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். முன்னோர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளில் ஊறிப் போயிருந்த  அம்மக்களும் நபி(ஸல்) அவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர். நபி(ஸல்) அவர்களின் பொன்னான மேனியில் ஏற்பட்ட காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தால் அவர்களின் பாதணிகள் தோய்ந்து போகும் அளவுக்குத் தாக்கப்பட்டார்கள்.
அப்போது அவர்கள் செய்த பிரார்த்தனை உருக்கமானதாகும். அப்போது இறைவன் நபியவர்கள் விரும்பினால் அந்த மக்களை அழித்து விடலாம் என்பதற்காக  அந்த மலைக்குப் பொறுப்பாளியான வானவரை  நபிகளார்பால் அனுப்பினான்.
எனினும் நபி(ஸல்) அவர்கள் அம்மக்களை அழிக்க விரும்பவில்லை. மாறாக
இவர்கள் சத்தியத்தை ஏற்காவிட்டாலும் இவர்களின் சந்ததிகளில் இறைவனுக்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனை மட்டும் வணங்குபவர்கள் உருவாக வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்எனக் கூறினார்கள்.

நபிகளாரின் நிலையை சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும். எந்த ஒரு சராசரி மனிதனும் தன்னை தாக்கி அழிக்க வரும் ஒரு கூட்டத்தை திருப்பி அடிக்கவோ அழிக்கவோ வாய்ப்பு கிடைத்தால் அதைத்தான் விரும்புவான். ஆனால் நபிகளார் அந்த வாய்ப்பை அப்பட்டமாக மறுத்ததோடு மட்டுமல்லாமல் அதே மக்களின் சந்ததிகளை நினைத்துப் பார்க்கிறார்கள்! இவர்கள் இன்று சத்தியத்தை ஏற்காவிட்டாலும் இவர்களின் எதிர்கால சந்ததியினர் சத்தியத்தை ஏற்பவர்களாக மாறவேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். அவர்களுக்காக உருக்கமாகப் பிரார்த்திக்கிறார்கள். தன் வலிகளை மறக்கிறார்கள்!


ஆம், இந்த மனிதகுல மாணிக்கத்திடம் மனிதகுலம் பெறவேண்டிய பாடம் இதுதான்... மனிதர்களைக் கண்மூடித்தனமாக  கொன்றோதுக்கிவிட்டு அவர்களின் சமாதிகளின் மேல் நிலைநாட்டப் படுவதல்ல தர்மம் என்பது. மாறாக மக்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே அதர்மத்தை அகற்றி அங்கு நிலைநாட்டப் படுவதே தர்மம்! ஒவ்வொரு மனிதனும் அவர்களின் சந்ததிகளும் நமக்கு வேண்டியவர்களே ! இஸ்லாம் என்ற சுயசீர்திருத்தக் கொள்கையை ஏற்றவர்கள் இந்த அடிப்படையில்தான் செயல்பட வேண்டும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக