இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 டிசம்பர், 2012

இயேசுவின் அற்புதப் பிறப்பு ! அதை உறுதிப்படுத்தும் இறுதி ஏற்பாடு!

Image result for birth of jesus islam
அனைத்து இறைத்தூதர்களும் நம்மவர்களே!
நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவன். எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. நம் குடும்பத்துக்கு வழி காட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களை அனுப்பி உள்ளான். அவர்கள் அனைவரும் நம்மவர்களே என்பதுதான் உண்மை. காலத்தால் முந்தியவர்களும் பிந்தியவர்களும் இருக்கலாம். அவர்கள் அனைவரையுமே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இந்த பரந்த மனப்பான்மையோடு அணுகினால்  நாம் இன்று இழந்து விட்ட சகோதரத்துவ உணர்வை மீண்டும் நிலை நாட்ட முடியும்.
இறைவனின் தூதர்கள் இடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்பது இறைக் கட்டளை (திருக்குர்ஆன் 2:285).  அந்த இறைத் தூதர்கள் வரிசையில் வந்தவரே நமது ஏசு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்)
ஆம், சத்தியத்தை நிலைநாட்ட இப்பூமிக்கு வந்த மகத்தானதோர் இறைத்தூதர் ஏசு!

பிறந்த நாள் முதலே அற்புதங்கள்  பல நிகழ்த்திய மகான்!
அன்னை மரியாளுக்குப் பிறந்த அந்த அற்புதக்  குமாரன் அயராது  சத்திய போதனை செய்தார்!
அஞ்சா நெஞ்சனாக  அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும்  எதிராகப் போராடினார்! கடவுளின் பெயரால் பொய்யுரைத்து மக்களுக்கு இடையே பிளவுகள் உண்டாக்கும் மதகுருமார்களையும் மக்கள் சுரண்டப் படுவதையும் தீவிரமாக எதிர்த்தார்.
விளைவு ?...........அநீதியாளர்களின் சூழ்ச்சிக்கு ஆளானார் ஏசு!  அவரைக் கொன்று சத்தியத்தின் வளர்ச்சியை தடுக்க சதி செய்தனர் எதிரிகள் !
ஆனால் வல்ல இறைவனால் அற்புதமான முறையில் காப்பாற்றப் பட்டார்!
ஆம், இறைவன் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்!
அவரைத் தொடர்ந்து சுமார் 550 வருடங்களுக்கப் பிறகு அதே பாதையில் சத்தியத்தை நிலை நாட்ட வந்தவரே முஹம்மது நபி அவர்கள். அவர் மூலமாக அனுப்பப்பட்ட வேதமே திருக்குர்ஆன்! பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்ற தொடரில் வந்த இறுதி ஏற்பாடுதான் திருக்குர்ஆன்! அந்த இறுதி மறையில் நம் அனைவரின் அன்புக்கும் பாத்திரமான ஏசுவின் பிறப்பு பற்றி இறைவன் கூறுவதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்திகள் காணக் கிடைக்கின்றன:
= இறைவன் பரிசுத்த ஆவியானவரை அன்னை மரியாளிடம் அனுப்பி அவரைக் கருத்தரிக்கச் செய்ததைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:
16. இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
17.
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (பரிசுத்த ஆவியை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
18. '
நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று (மர்யம்) கூறினார்.
19. '
நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'என்று அவர் கூறினார்.
 20. 'எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?' என்று (மர்யம்) கேட்டார்.
21. '
அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும்,  நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்' (என்று ஜிப்ரீல் கூறினார்.)
திருமணம் ஆகாமலே கருவுற்றதைத் தொடர்ந்து அன்னையவர்கள் கடுமையான மனவேதனைக்கும் சமூகத்தில் சோதனைகளுக்கும் ஆளாகிறார்கள். திருமணமாகாத ஒரு கன்னிப்பெண் திடீரென கர்ப்பிணியானால் மக்கள் வெறுமனே விட்டுவிடுவார்களா? அவரது தர்மசங்கடமான அனுபவத்தை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23.
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.
24. '
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. '
பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்' (என்றார்)
26.
நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் 'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்' என்று கூறுவாயாக!
இவ்வாறு அற்புதமான முறையில் எந்த ஆணின் துணையுமின்றி ஏசு என்ற அற்புத மகனைக் கற்பம் தரித்துப் பெற்றேடுக்கிறார்கள்  அன்னை மரியாள் அவர்கள்! இனி அந்த மகவைத் தாங்கிக்கொண்டு மக்களுக்கு முன்னால் சென்றாக வேண்டுமே! அவரது மனோ நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப்  பாருங்கள்! ‘எப்படி நான் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக் கொள்வேன்? எந்த முகத்தோடு நான் அவர்களை எதிர்கொள்வேன்? குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி ஒளியவா முடியும்?’ .... ஆம் அவர் எதிர்பார்த்தபடியே மக்கள் கடுமையாக அவரை ஏசினார்கள்.
27. (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளை யைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். 'மர்யமே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?' என்று அவர்கள் கேட்டனர்.
28. '
ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை' (என்றனர்)
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அன்னை மரியாள் அவர்கள் என்ன செய்தார்கள்? அன்னை மரியாளின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்த மக்கள் திடீரென எவ்வாறு மாறினார்கள்? அன்றைய யூத சட்டப்படி விபச்சாரக் குற்றத்திற்கு தண்டனை கல்லால் எறிந்து கொல்லப்படுவதுதான் என்றறிவோம். இருந்தும் அன்னை மரியாளைக் காப்பாற்றியது எது? பிறகு எப்படி அவர்களைப் புனித மங்கையாக ஏற்றுக் கொண்டார்கள்? குழந்தை ஏசுவை எப்படி புண்ணிய புத்திரனாக ஏற்றுக் கொண்டார்கள்? ஒரு முக்கியமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? இந்தப் புதிருக்கு விடை காண வேண்டுமா? மேலே படியுங்கள்: 
29. அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! 'தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?' என்று அவர்கள் கேட்டார்கள்.
30.
உடனே அவர் (அக்குழந்தை), 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.
31, 32.
நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான்.  என்னை துர்பாக்கிய சாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.
33.
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் (இறை சாந்தி) இருக்கிறது' (என்றார்)
ஆம் அன்பர்களே, இதைத்தான் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். மரியாளைத் தூற்றிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் அந்த அற்புதத்தைக் கண்கூடாகக் கண்டது. குழந்தை ஏசு வாய்திறந்து பேசிய அற்புதத்தை! இந்த அற்புதம்தான் கர்புக்கரசியான மரியாளை மக்களின் அவதூறுகளில் இருந்து காப்பாற்றியது. அந்த நிமிடம் வரை மரியாளைத் தூற்றிய மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அன்னையவர்களின் தூய்மையைப் போற்ற ஆரம்பித்தார்கள். இறைவன் மிகப் பெரியவன்! இந்த மாபெரும் அற்புதம்தான் அங்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  கைக்குழந்தை ஏசு பேசிய வார்த்தைகளும் இங்கு நாம் கவனிக்க வேண்டியவை.
= இதுதான் ஏசு செய்த முதல் அற்புதம்!
= இவைதான் ஏசுவின் முதல் வார்த்தைகள்! 
இவ்வாறு இறைவனின் முந்தைய வேதம் பைபிள் விட்டுச் சென்ற புதிரை தொடர்ந்து வந்த இறுதி வேதம் குர்ஆன் அவிழ்க்கிறது. 

34.
இவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.
(அத்தியாயம் 19 – ‘மரியம் வசனங்கள் 16 முதல்  34 வரை )
ஆண்துணையின்றி குழந்தை பிறப்பது அசாத்தியமானது என்று சொல்லி ஏசுவின் பிறப்பைப் பற்றி நம்பாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு உறைக்கும் வண்ணம் திருக்குர்ஆன் ஒரு அழகிய வாதத்தை முன்வைக்கிறது:
3: 59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து 'ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
60. இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்!
அதாவது  முதல் மனிதர் ஆதம் தாயும் தந்தையும் இன்றி மண்ணிலிருந்து படைக்கப் பட்ட ஓர் அற்புதம். அதை நீங்கள் நம்புகிறீர்கள். அதை நிகழ்த்திய அதே இறைவனுக்கு தந்தையில்லாமல் ஒரு மனிதரை உருவாக்க முடியாதா? ஆதாமின் தோற்றத்தை நம்பும் உங்களுக்கு இயேசுவின் தோற்றத்தை நம்ப முடிவதில்லையா? என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்துணர வைக்கிறான் இறைவன்!
ஆம் அன்பர்களே பைபிளை மெய்ப்பிக்க வந்ததே திருக்குர்ஆன் பழைய ஏற்பாட்டையும் பின்னர் புதிய ஏற்பாட்டையும் தொடர்ந்து இறைவன் அருளிய இறுதி ஏற்பாடுதான் திருக்குர்ஆன்! வாருங்கள் நாம் இணைந்து சத்தியத்தை அறிவோம்! ஒன்றுபடுவோம்! சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்!.....


ஏசு நாதர் அவருக்குப் பின்னால் வரவிருந்த  நபிகள் நாயகத்தைப் பற்றிக் கூறிய  யோவான் 16-இல் இடம்பெறும் வார்த்தைகள் நம் கவனத்துக்குரியவையே!
7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
9. அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
10. நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.  

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன?

http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html 
நாம் ஏன் பிறந்தோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக