இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 நவம்பர், 2012

பகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை!

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அரபு நாட்டுப் பாலைவனத்தில் வாழ்ந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே  திருக்குர்ஆன் என்பது. இவை இறைவசனங்கள்தானா என்று சந்தேகம் கொள்பவர்கள் ஒரு உதாரணத்திற்காக கீழ்கண்ட வசனங்களை சற்று சிந்திக்கட்டும்.
21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் (சத்தியத்தை மறுப்பவர்கள்) பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
21:31. இன்னும்; இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் உலகில் குறிப்பாக அறிவியல் வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை நாம் ஊகித்து அறியலாம். இன்று நவீன விஞ்ஞானம் கண்டறிந்த பெருவெடிப்புக் கொள்கை, நீரிலிருந்தே உயிரினங்களின் துவக்கம், சுழலும் பூமிக்கு உறுதியூட்டும் மலைகள். கோள்களின் இயக்கங்கள் போன்ற பல உண்மைகளைத் தாங்கி நிற்கின்றன மேற்படி வசனங்கள். அறிவியலைக் கற்பிப்பது திருக்குர்ஆனின் நோக்கம் அல்ல. ஆனால் படைப்பினங்களை ஆராயத் தூண்டி அதன்மூலம் படைத்தவனைப் பற்றியும் அவன் வல்லமைகளைப் பற்றியும் மனிதன் பகுத்தறிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே இப்படிப்பட்ட வசனங்களின் தலையாய நோக்கம். திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாமரர்களையும் நோக்கிப் பேசுகிறது. அறிவியலில் ஓரளவுக்கு முன்னேறியுள்ள இன்றைய மக்களையும் நோக்கிப் பேசுகிறது. நாளை மனிதன் விஞ்ஞானத்தின் உச்சிக்கே சென்று இருப்பான். அவர்களையும் நோக்கிப் பேசுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இவர்கள் யார் படித்தாலும் அவற்றை முரண்பாடின்றி புரிந்துகொள்ளும் வண்ணம் இறைவசனங்கள் எவ்வளவு நேர்த்தியாக அமைந்துள்ளன என்பதைப் பாருங்கள். முக்காலத்தையும் உணர்ந்தவனும் அனைத்தையும் அறிந்தவனும் ஆகிய வல்ல இறைவனால் அன்றி இப்படிப்பட்ட வசனங்களை இயற்ற முடியுமா? இன்னும் இவையனைத்தையும் தலைசிறந்த கவிதை நடையில் சொல்லுவதென்றால் மனிதர்களால் சாத்தியமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக